மதுரை, விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்
மதுரை, விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்
மதுரை, விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்
சென்னை:மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நேற்று நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் தொற்றுநோய் மருத்துவமனைக்கு 360 படுக்கைகளைக் கொண்ட புதிய கட்டடங்களைக் கட்டவும், வசதிகளை அதிகரிக்கவும் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஐந்து கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி ஏற்கும். இத்திட்டம், ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சென்னை மாநகராட்சிப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்த, 12.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ-கவர்னன்ஸ் திட்டம், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.கோவில்பட்டி நகராட்சிக்கு 80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒரு குடிநீர்த் திட்டம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்த, விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. நிதியாதாரம் இறுதி செய்யப்பட்ட உடன், இத்திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி, நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 200 புதிய குடியிருப்புகள், 11.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக நிலை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை கோயம்பேட்டில், கூடுதலாக ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், அவனியாபுரம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, பரவை, விளாங்குடி, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள், 1,430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 12 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 806 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் நிதி ஆதாரம் பெற்று எடுத்துக்கொள்ளப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,457 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 572 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம், குறைந்தபட்சத் தேவைத் திட்ட நிதியாதாரத்துடன் செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தரமான குடிநீர் வழங்க உருவாக்கப்பட்ட ஜல்மானி திட்டத்தின் கீழ், குடிநீர் சுத்திகரிப்புக் கலன்கள் 6,000 பள்ளிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்படும்.மத்திய அரசின் கிராமக் குடிநீர்த் திட்ட விதிமுறைகளின்படி 8,009 கிராமக் குடியிருப்புகளில் 554.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் குடிநீர் வசதி செய்து தரப்படும்.இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார்.